Tuesday, December 04, 2007

star6. காந்தி யாருக்குத் தேவை ?

K P Fabian என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன்.
*********************************
காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பேசும்போது, 'இவரைப் போல் ரத்தமும் சதையுமாக ஒருவர் இப்பூமியில் உலவினார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பத் தயங்குவார்கள்' என்கிறார்! உலகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியின் காந்தி குறித்த ஆச்சரியமும், மரியாதையும் இந்தியர்களாகிய நம்மிடமும் உள்ளதா ?
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்தியர்களில் பலர், பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் உலகமயமாக்கலை முன்னிறுத்தும் இன்றைய இந்தியாவில் காந்திக்கும் அவர்தம் கோட்பாடுகளுக்கும் எவ்வித இடமும் இருப்பதாகக் கருதுவதில்லை! 8% GDP வளர்ச்சியுடன் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி வரும் இன்றைய இந்தியா, காந்தி என்பவர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு வரலாற்று குறிக்கோளுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்பது தவிர, காந்தியையும், காந்தியத்தை எண்ணிப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று நம்புகிறது.

இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்ப்போம். தற்போது பல இந்தியாக்கள் உள்ளன! ஒரு ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வரவழைக்க இயலாத "ஜொலிக்கும் இந்தியா" (Shining India), அன்னியச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க "அபார இந்தியா" (Incredible India), உலகளவில் பேசப்படும், எண்ணிக்கையில் முன்னேறி வரும், பெரும்பணக்காரர்களை உடைய "பணக்கார இந்தியா" என்று சில உள்ளன. இவை தவிர, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைகளில் பிரகாசிக்கும் "அறிவுஜீவி இந்தியா", "எழுச்சி மிகு இந்தியா", "சென்சக்ஸ் இந்தியா" என்று மொத்தத்தில் பல இந்தியாக்கள் நிலவுகின்றன!

எந்த இந்தியாவை நம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ? சரியானதை தேர்வு செய்ய (நாம் ஒரு ஜனநாயகமாக இருப்பதால்!), நமது பெரும்பான்மையான மக்களின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது! நாளை இந்தியா யு.என். பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனால் இந்தப் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்பட்டு விடும் ? அர்ஜுன் சென்குப்தா கமிஷன் அறிக்கையின்படி, ஒழுங்கற்ற பணித்துறையில் (unorganized job sector), 77 சதவிகித மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் சம்பளத்தில் வாழ்கின்றனர். மிக அடிமட்டத்தில், 7 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 9 ரூபாயில் வாழ்கின்றனர்!

யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தக் கூறிய ஒரு வாதமாக இல்லாமல், நாம் கவனிக்கத் தவறிய ஒரு முக்கியப் பிரச்சினையை முன்னிறுத்தவே இவ்வாறு கூற வேண்டியுள்ளது. இந்தியா யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஆனால், மேற்கூறிய மக்களுக்கு "பாதுகாப்பான" குடிதண்ணீர் கிட்டுமா என்ன?

நாம் சுட்டிக்காட்டும் இந்த 83.6(77%) கோடி மக்கள் டிவி சேனல்களின் SMS சர்வேக்களில் கலந்து கொள்வதில்லை! இருப்பினும், நம்மை ஒரு ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டதால், இந்த 77 சதவிகித மக்களின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியிருக்கிறது. இங்கு தான் 1948-இல் காந்தி (அரசுத் துறைகளில், பொதுக் கொள்கைகளுக்கு திட்ட வடிவம் தரும் நபர்களுக்கு ஓர் அறிவுரையாக) கூறிய பேருண்மை வாய்ந்த சொற்களை நினைவு கூர்வதும், அவற்றை அந்த 83.6 கோடி மக்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியமாகிறது!

"ஒரு கொள்கை குறித்து உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டாலோ, சுயம் உங்களை ஆக்ரமிக்க தலைப்பட்டாலோ, ஒரு தேர்வுக்கு உங்களை ஆட்படுத்துங்கள். நீங்கள் சந்தித்ததிலேயே, ஏழ்மையால் மிகவும் பீடிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நினைவு கூர்ந்து உங்களையே கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள், 'நீங்கள் எடுக்கும் முடிவால், அந்த மனிதனுக்கு ஏதாவது பயனுண்டா? உங்கள் முடிவு அம்மனிதனது வாழ்வையும் விதியையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏதாவது வகையில் உதவுமா? உங்கள் முடிவு, வயிற்றுப்பசியிலும், அறிவுப் பசியிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை பெற்றுத் தருமா?' மெல்ல உங்கள் ஐயங்களும், சுயமும் தானாகவே உருகிப் போய் விடும்"

அம்மக்களிடம் மேலும் கூறுவோம்: இதுவரை தொடர்ந்து ஆட்சி செய்த அரசுகளும், உயர் அரசு அலுவலர்களும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை வடிவமைத்தபோது, காந்தியின் வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட்டிருந்தால், நம் நாட்டின் முகம், வறுமையால் பீடிக்கப்பட்டு, இன்று இத்தனை கோரமாக காட்சியளிக்காது!

இவற்றையெல்லாம் கேட்டு அம்மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் ?

சரி, மீதமுள்ள 23 சதவிகித மக்களுக்கு காந்தியின் தேவை உள்ளதா ? உள்ளது!

எப்படி, நமது ஜனநாயகத்தின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது. சமூக விரோதிகள், மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெறுகின்றனர், நாட்டைச் சுரண்டும் கொள்ளைக்காரர்கள் எப்படியோ தண்டனையிலிருந்து தப்பி விடுகிறன்றனர்! பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், உறுப்பினர்களின் 'திட்டமிட்ட' குறுக்கீடுகளால் விவாதங்களில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய பொன்னான நேரம் தாராளமாக வீணடிக்கப்படுகிறது. மேற்கூறியவை பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு காந்தியின் தேவை உள்ளது! காந்தி பொதுவாழ்விலும், அரசியலிலும், மதிப்புக்கு உரிய கோட்பாடுகளை போதித்ததோடு, அவற்றை கடைபிடிக்கவும் செய்தார்!

நாமெல்லாம் உண்மையானவராகவும், அச்சமில்லாதவராகவும், லட்சியவாதிகளாகவும், அகிம்சாவாதிகளாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை காந்தி வலியுறுத்தினார். இன்றைய சூழலில் கூட, சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், காந்தியின் பொருளாதாரத் தத்துவத்திற்கு (திட்டங்களாக) செயல் வடிவம் தர முடியும்! இன்றைய வன்முறைச் சூழலைப் பார்க்கும்போது, காந்தி சொன்ன ... கண்ணுக்குக் கண் என்பது ஒரு கட்டத்தில் உலகத்தையே குருடாக்கி விடும் ... என்பதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

ஆகவே, நல்லதோர் இந்தியாவை (ஏன், உலகத்தை) விரும்பும் அனைவருக்கும் காந்தி என்பவர் தேவையாகிறார்! மேலும், காந்தி இன்று நம்மிடையே இருந்திருந்தால், தீவிரவாதம் இந்த அளவுக்கு நிச்சயம் தலை விரித்து ஆடாது என்று ஓர் எண்ணம் தோன்றுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும், காந்தியத் தீர்வு என்று ஒன்று இருப்பதாக வாதிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல! காந்தியத்தில் பல நல்ல விஷயங்கள் உள்ளன, அவற்றைப் புரிந்து கொள்வதும், கடைபிடிப்பதுமே நாம் காந்திக்கு செய்யும் அஞ்சலி, அவரை வழிபடுவதின் மூலம் அல்ல !

காந்தியே சொன்னது போல, "இவ்வுலகத்திற்கு போதிக்க என்னிடம் எதுவும் இல்லை! உண்மையும், அகிம்சையும், இவ்வுலகில் உள்ள மலைகளைப் போல் பழமையானவை!"
**************************

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

P.S:

காந்தி சொன்ன ஏழு கொடும்பாவங்கள்:

1. உழைப்பால் ஈட்டாத செல்வம்


2. மனசாட்சிக்கு புறம்பான இன்பம்

3. மனிதத்தை முன்வைக்காத அறிவியல்

4. நற்குணம் சாரா ஞானம்

5. கோட்பாடில்லா அரசியல்

6. ஒழுக்கமில் வணிகம்

7. தியாகம் அறியா வழிபாடு

8 மறுமொழிகள்:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள் பாலா . நட்சத்திர வரத்தை தாங்கள் சரியாகப் பயன்படுத்துகின்றீர்கள். பாராட்டுக்கள்

இந்தப் பதிவில் உள்ளதை தாங்கள் பிரசுரிக்க முடியுமா...?

www.vithaigal.blogspot.com

(Save my Friend)

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா... நல்ல பதிவுகள் போடுவீர்களெனெ எதிர்பார்க்கின்றேன்

இ.கா. வள்ளி

enRenRum-anbudan.BALA said...

நிலவு நண்பன்,
கருத்துக்கு நன்றி.
//
இந்தப் பதிவில் உள்ளதை தாங்கள் பிரசுரிக்க முடியுமா...?

www.vithaigal.blogspot.com
//
நிச்சயம் இடுகிறேன்!
*****************************
இ.கா. வள்ளி,

கருத்துக்கு நன்றி.
நல்ல பதிவுகள் தான் இடுகிறேனா என்று வாசகராகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)

வீ. எம் said...

//அரசுகளும், உயர் அரசு அலுவலர்களும், வறுமை ஒழிப்புத் ...காந்தியின் வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட்டிருந்தால், நம் நாட்டின் முகம், வறுமையால் பீடிக்கப்பட்டு, இன்று இத்தனை கோரமாக காட்சியளிக்காது!//

மிகச்சரியாக சொல்லியுள்ளீர் பாலா.

நட்சத்திர வாரத்திற்கு ஏற்ற நல்லதொரு பதிவு பாலா...வாழ்த்துக்கள்.

வீ எம்

Unknown said...

//... ஒரு தேர்வுக்கு உங்களை ஆட்படுத்துங்கள். நீங்கள் சந்தித்ததிலேயே, ஏழ்மையால் மிகவும் பீடிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நினைவு கூர்ந்து உங்களையே கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள், 'நீங்கள் எடுக்கும் முடிவால், அந்த மனிதனுக்கு ஏதாவது பயனுண்டா? உங்கள் முடிவு அம்மனிதனது வாழ்வையும் விதியையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏதாவது வகையில் உதவுமா? உங்கள் முடிவு, வயிற்றுப்பசியிலும், அறிவுப் பசியிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை பெற்றுத் தருமா?'....//

இந்த வாசகத்தை நமது பார்லிமெண்டில் உள்ளவர்கள் (Parlimentarians) தினமும் படித்து பார்க்கும் மாதிரியான இடத்தில் வைத்தால் ஏதேனும் நன்மை விளையுமா?

said...

GANDHI IS ALWAYS RELEVENT!

Whenever we see a GREAT HUMANS - we put a circle of light behind their head and put them on a pedestal - and say oh, only he can be like that! It's our escape path to being whatever we are! No need to strive to be something else!!!
We should stop doing that and humanise these great leaders - HUMANS - so that there can be many of them!

Great post! Good work man!

enRenRum-anbudan.BALA said...

VM, Sultan, APALA,

varukaikkum karuththukkum nanRi.

சூரி said...

காலையில் மனதில் ஒலித்த "மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்" என்ற சொற்றொடருக்கு விரிந்த பொருள் காண இணையத்தைத் தேடியபோது முதலில் கிடைத்தது, தமிழ்மணம். தங்களது விளக்கம் படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து உங்கள் தளத்தைத் தேட, "காந்தி யாருக்குத் தேவை?" என்ற தங்கள் மொழிபெயர்ப்புக் கட்டுரையைப் படித்து மேலும் இன்புற்றேன். மஹாத்மாவை நேசிக்கும், பின்பற்ற பெரிதும் விரும்பும் (ஆனால் முடியாமல் தடுமாறும்) ஒருவன் என்ற முறையில், இன்றைய காலைப் பொழுதை இனிதாக்கிய தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். GOD BLESS U AND YOUR FAMILY!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails